சென்னை: “தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதில்தான் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, “கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. அதைத் தடுக்க காவல் துறைக்கு நேரமில்லை. திமுக மீது வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அழித்துவிடலாம் என நினைப்பது மடத்தன.
விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதல்வர் விஜயை அவதூறாக பேசியதாக கூறி கைது செய்துள்ளனர். இதுபோன்ற அச்சுறுத்தல்களை எல்லாம் கண்டு பயப்படுகின்ற கட்சி அல்ல திமுக.
எமர்ஜென்சியை பார்த்தவர்கள். சிறைச்சாலைக்கு பலமுறை சென்று வந்தவர்கள். நாட்டுக்காகவும், மொழிக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறையிலே இருந்த கட்சிதான் திமுக.
சட்ட நகலை எரித்ததற்காக மதுரையில இரண்டு வருடம் தண்டனை பெற்றிருந்த தோழர்கள் எல்லாம் உண்டு. எம்ஜிஆர் கட்சி துவங்கிய நேரத்தில் அந்த கட்சியினுடைய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார் கே.ஏ.கிருஷ்ணசாமி அப்பொழுது அவர் மேடையில் எம்ஜிஆரை வைத்துக்கொண்டே பேசினார்.
எம்ஜிஆர் ஆணையிட்டால் கருணாநிதியுடைய தலையை கொய்து வருவேன் என்று கேஏ.கிருஷ்ணசாமி பேசினார். ஆனால் அவர் மீது தலைவர் கருணாநிதியோ, திமுகவோ வழக்கு போடவில்லை, இதுபோன்ற நடவடிக்கை எல்லாம் மேற்கொள்ளவில்லை. அண்ணாவைப் பற்றி மிக கேவலமாக, கீழ்த்தரமாக காங்கிரஸ்காரர்கள் பேசினார்கள். ஆக ஜனநாயகத்தில் சகிப்பு தன்மை வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சிக்கு அது அறவே இல்லை என்பதை இந்த 60 நாளில் நிரூபித்து விட்டார்கள்.
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார் உடனே அவர் கைது செய்யப்பட்டார். இவர் இரண்டாவது எம்எல்ஏ கைது செய்யப்படுறார். அதாவது இது எதைக் காட்டுகிறது என்றால், மற்ற கட்சியில் இருந்தெல்லாம் எம்எல்ஏக்களை பல்வேறு வகையில அவர் கட்சி மாற்றி அவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால், திமுகவில் இருக்கிற எம்எல்ஏக்கள் வைரம் போன்ற தொண்டர்களாக இருக்கிற காரணத்தினால் அவர்களை மாற்றி கட்சியில் சேர்க்க முடியாது என்பதற்காக இப்படிப்பட்ட வழிகளை இந்த அரசு கையாளுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய அளவுக்கு இந்த நடவடிக்கை இருக்கிறது.
ஆறு எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஆளும் கட்சிக்கு சென்றுள்ளனர். இன்னும் சிலர் போவதாக சொல்கிறார்கள். ஆனால் திமுகவில இருந்து யாரும் போகாததனால் இவர்கள் மீது வழக்கு போடுவோம் என்று சொல்கிறார்கள்.
நாங்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க கூடியவர்கள். ஆகவே சட்ட ரீதியாக அதை சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது. அவர் அப்படி பேசி இருந்தால் வழக்கு போடலாம். வழக்கை நீதிமன்றத்தில் நடத்தலாம். கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆக, மன உளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கைது திமுகவினர் கைது செய்யப்படுகிறார்கள்.
எங்களை மட்டும் அல்ல, சமூக வலைதளங்களில் கருத்து போடுபவர்களை கூட காவல் துறை கைது செய்கிறது. அதேபோல தொலைக்காட்சி நெறியாளர் விஜயனை இந்த காவல் துறை விசாரணை என்ற பெயரில் அத்துமீறி நடந்துள்ளது. இதெல்லாம் தமிழ்நாட்டில் இதுவரை பார்க்காதது; இதெல்லாம் இப்போது நடக்கிறது.
ஆனால் அதேநேரத்தில் கொலையும் கொள்ளையும் பாலியல் வன்கொடுமையும் தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறைக்கு அந்த வேலை பார்ப்பதற்கு நேரமில்லாமல் திமுகவையும் இந்த ஆட்சியை விமர்சிக்கிறவர்களையும் கைது செய்து கொண்டுள்ளது.
திமுகவை தவிர மற்றவர்கள் எல்லாம் அந்தப் பக்கம் போய்விட்டதாக ஒரு எண்ணம் இருக்குகிறது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஒற்றை மனிதராக இருந்தாலும் திமுககாரன் நடுரோட்டில் நின்று தன் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசக்கூடிய தொண்டர்களை பெற்றிருக்கிற கட்சிதான் திமுக.
எவ்வளவு பேரை கைது செய்து சிறை வைக்க முடியும்? இதுபோல எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் இது அரசாங்கத்துக்கும் மக்களுடைய வரிப்பணத்துக்கும் வீணான செலவு என்பதுதான் எங்களுடைய கருத்து” என்று அவர் தெரிவித்துள்ளார்.