சர்க்கார் விரைவு ரயிலில் ரூ.62.50 லட்சம் ஹவாலா பணம் எடுத்து வந்தவரை ஆர்பிஎஃப் போலீஸார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் போலீஸார் நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது. தெலங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து எழும்பூருக்கு சர்க்கார் விரைவு ரயில் வந்தது. அதிலிருந்து இறங்கிய ஒருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தனர். அதில் துணியால் சுற்றப்பட்ட ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் இந்திய பணம் இருந்தது.
ஆனால், அந்தப் பணத்துக்கான சான்று எதையும் காட்டவில்லை. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆந்திரப் பிரதேசம் நெல்லூரைச் சேர்ந்த கவுதம் (30) என்பதும், நெல்லூர் பகுதியில் தங்க நகைகள் விற்பனை செய்யும் ஒருவர் கவுதமிடம் இப்பணத்தை சென்னை சவுக்கார் பேட்டையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க கூறியதாகவும், இதற்கு கூலியாக ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை தருவதாகவும் கூறியதன் அடிப்படையில் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் அப்பணம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், அந்த நபரிடம் தொடர் விசாரணை நடைபெறுகிறது.