

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) தனியார்மயமாக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தனியார்மயமாக்கல் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுத்த லாபம் பெறுவதற்கு ஆதாரவாகவே அமைந்துள்ளன.
அந்தவகையில், தற்போது இஸ்ரோவையும் தனியார்மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இத்தகைய தேச விரோதப்போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ள பொதுத்துறை நிறுவனமான இஸ்ரோ, ஆர்யபட்டாவில் தொடங்கி கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உலகம் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்து, நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத் திறனைப் பறைசாற்றி வருகிறது.
பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகளின், தனியார் நிறுவன விண்கலங்கள் இஸ்ரோ மூலம் ஏவப்படுகின்றன. இது இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப சாதனை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதையே காட்டுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் ‘ஸ்கை ரூட்’ என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்படுவது கவலை அளிக்கிறது. அதேபோல, அணுசக்தித் துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றையும் பாஜக அரசு தனியார்மயமாக்கி வருகிறது.
இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், நாடாளுமன்ற உரிமைகளுக்கும் முரணானது. நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இஸ்ரோவை தனியார்மயமாக்கும் நடவடிக்கையையும், தனியார் விண்வெளி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதையும் மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.