மதுரை: தென் மாவட்டங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடும்போது ரூ.35 கோடி தாட்கோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்த விவரங்களில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) கடந்த 1974-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இத்துறை மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுகிறது. இந்த துறையின் கீழ், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம், சுய வேலைவாய்ப்புக்கான கடன் உதவி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.
மேலும், இத்துறை வீடற்றவர்களுக்கு வீடு கட்டுவது, தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்கள் வழங்குவது, வேலை வாய்ப்புக்கான பயிற்சிகள் அளிப்பது உள்ளிட்ட பலதரப்பட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடும்போது, தாட்கோ நிதி ஒதுக்கீடு தென் மாவட்டங்களுக்கு ரூ.35,97,42,258 (முப்பத்தி ஐந்து கோடியை 97 லட்சம் வரை) நிதி குறைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறியும் சட்டம் மூலம் கிடைக்கப்பட்ட தகவல்களை பெற்ற மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் செ.கார்த்திக் கூறுகையில், “கடந்த 2020-21 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான 6 ஆண்டுகளில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி ஆகிய 7 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிதி ரூ.143 கோடியே 81 லட்சத்து 88 ஆயிரத்து 66 ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-23 நிதியாண்டில் ரூ.53 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரத்து 59 ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நிதி ஒதுக்கீடு படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு நடப்பு நிதியாண்டான 2025-26ல் வெறும் ரூ.17 கோடியே 57 லட்சத்து 12 ஆயிரத்து 332 மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட ரூ.35,97,42,258 நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2022-23ம் ஆண்டு முதல்முறையாக உயர்த்தப்பட்ட நிதி, அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக நிதி குறைக்கப்பட்டதன் மூலம் மத்திய, மாநில அரசு ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் மக்களுக்கான நலனில் அக்கறை காட்டவில்லை என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதேபோல் கடந்த 6 ஆண்டுகளில் அதிகப்பட்சமாக நிதிக் குறைக்கப்பட்ட மாவட்டங்களில் சிவகங்கை மாவட்டம் வெறும் ரூ.9 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே பெற்று முதலிடத்திலும். தென்காசி மாவட்டம் ரூ.14 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து பெற்று இரண்டாவது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம் ரூ.16 கோடிய 56 லட்சத்து 2 ஆயிரத்து 57 (பதினாறு கோடியே 56 இலட்சம் வரை) பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் தாட்கோவிற்கு கிடைக்கபெற்ற மொத்த நிதியில் ரூ.4,62,32,254 பயன்படுத்தாமல் அரசுத்துறைக்கு திரும்ப சென்றுள்ளது. அதிகப்பட்சமாக தேனி மாவட்டத்தில் ரூ.3,38,68,948 திரும்ப சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நடப்பாண்டான 2025-26 நிதியாண்டு முடிய இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், தேனி மாவட்டத்தில் ரூ.16,20,497 திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிகிறது.
இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தொடர்ந்து குறைத்து வருவதால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக பிரத்யேகமாக வழக்கத்தில் இருந்து வந்த வாய்ப்புகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகள் பாதியிலேயே முடங்கிப் போய்யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்மக்களின் வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகளில் பெறும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.