சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த நிலையில்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 23,357 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், முதியோர்களுக்கான நடமாடும் சிகிச்சை மையங்கள் மற்றும் ‘தாய் கேர்’ மையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்ந்து பேசியது:
தாய் மற்றும் குழந்தை நல பராமரிப்பு, தமிழகத்தின் பொது சுகாதார அமைப்பின் முக்கிய தூணாக விளங்குகிறது. சமீபத்திய தேசிய மாதிரி பதிவு அமைப்பின் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 11 ஆக உள்ளது. இது தேசிய அளவில் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும்.
அரசு தொடர்ந்து பொது சுகாதாரத் துறையில் செயல்படுத்திய திட்டங்களால் மட்டுமே இது சாத்தியமானது. இதற்குச் சான்றாக, மாநிலத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இவற்றில் 53 சதவீதத்துக்கும் மருத்துவமனைகளில் மேற்பட்ட பிரசவங்கள் அரசு நடைபெறுகின்றன.
தாய்மாமன் தங்க மோதிரம்
அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரித்து. இதன் மூலம் மருத்துவத் தேவைகளுக்காக பொதுமக்கள் சொந்தமாகச் செலவிடும் தொகையைக் குறைக்கும் நோக்கில், அரசு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் இன்பத்தையும் முக்கியத்துவத்தையும் போற்றும் வகையிலும், தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் இத்திட்டத்தை வழங்கப்படும். நடைமுறைப்படுத்துவதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் படிப்படியாகத் தொடங்கப்படும். ஒவ்வொரு நடமாடும் சிகிச்சை மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு இயன்முறை மருத்துவர் பணியில் இருப்பர். தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் இவர்கள் நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை செய்வர். நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளும் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
‘தாய் கேர்’
மாநிலம் முழுவதும் ‘தாய் கேர்’ என்ற பெயரில் கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும்.
இந்த மையங்களில் கருவுற்ற பெண்கள் அவர்களுடைய மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம். இந்த மையங்களில், கருவுற்ற பெண்களுக்குக் கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
> தொலைதூரமற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குச் சிறப்பு மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில், அரசு ‘மையம் கிளை’ (Hub and Spoke) மருத்துவமனைகள் வகையிலான தொலைமருத்துவப் பராமரிப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
நிபுணத்துவ மருத்துவர்களைக் கொண்ட 5 மையங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை அளவிலான 200 கிளைகள் வலைதளம் மூலம் தொடர்புபடுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில், இம்மையங்கள் மற்றும் கிளைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 1,000 மையங்கள் ஏற்படுத்தப்படும். தொலை மருத்துவ வலையமைப்பை உருவாக்குவதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 18.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
புற்றுநோய் பராமரிப்பு தொடர்பாக இந்த அரசு மையம் கிளை' (Hub and Spoke) மருத்துவமனை வகையிலான அமைப்புகளை உருவாக்கும். புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனை, மாநில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகவும், உயர் சிகிச்சை மருத்துவமனையாகவும் மாற்றப்படும். நோயாளிகளின் முதல் தொடர்பு மையமாக, ஐந்து மண்டல புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும்.
இந்நிறுவனங்கள் புற்றுநோய் பராமரிப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக, திருத்த வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தொற்றாநோய்கள் மற்றும் புற்றுநோயாளிகளின் தொடர் சிகிச்சைக்கு அத்தியாவசிய மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியமாகும். பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகால நோய் கண்டறிதல் அதிகரித்துள்ளதால், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பரிசோதனைகள் மற்றும் ஆரம்பகால நோய் கண்டறிதல் அதிகரித்துள்ளதால், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு தொடர் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் கூடுதல் மருந்துத் தேவையை பூர்த்தி செய்ய, தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மருந்துகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த அரசு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் உயர்த்துகிறது.
இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 23,357 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.