அண்ணாசாலை, எல்லீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.35 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். | படம்: ம.பிரபு |
சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.52கோடி ரொக்கப் பணத்தை சென்னை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சேப்பாக்கத்தில் உள்ள சுவாமி சிவானந்தா சாலையில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர பதிவெண் கொண்ட கார் ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அதில் 12 கிலோ எடையுள்ள வெள்ளி குத்துவிளக்கு, தட்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
காரில் வந்தவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்காக வெள்ளிப் பொருட்களை கொண்டு சென்றதும், நிகழ்ச்சி முடிந்து வெள்ளிப் பொருட்களுடன் ஆந்திரா திரும்புவதும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை எல்லீஸ் சாலை - வாலாஜா சந்திப்பு அருகே நேற்று மாலை துறைமுகம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக ரூ.35 லட்சம் பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்சென்னை ஏழு கிணறு பர்தயார் தெருவை சேர்ந்த அனில்குமார் சிங் (47) என்பதும், ஜி.பி சாலையில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சவுக்கார்பேட்டையில் உள்ள ஒருவரிடம் கொடுக்கச் சென்றதாக கூறினார்.
பணம் அசோக் நகரை சேர்ந்த பைனான்சியர் கமல்(55) என்பவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.35 லட்சத்தை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தம்பதியிடம் ரூ.65,000 பறிமுதல் நெய்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது மனைவியுடன் நேற்று காரில் சிந்தாதிரிப்பேட்டை காசினோ திரையரங்கம் அருகே வந்துள்ளார்.
தேர்தல் பறக்கும் படையினர் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். தம்பதியரிடம் இருந்த ரூ.65 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அது வாடகை வீட்டுக்கான முன்பணம் என்று கூறப்பட்டது. ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.52 கோடி ரொக்கம் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.