கோப்புப் படம்
ஆவடி: அம்பத்தூர் அருகே அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்டன் குடியிருப்பு பகுதியில் உரிய ஆவணங்களின்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.22 கோடியை நேற்று முன் தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் விநியோகிப்பதை தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள கும்மிடிப்பூண்டி, மாதவரம், திருத்தணி உள்ளிட்ட 10 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அம்பத்தூர் அருகே அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்டன் குடியிருப்பு பகுதியில் நேற்று முன் தினம் இரவு தேர்தல் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் நிற்காமல் வேகமாக சென்று, அப்பகுதியில் உள்ள வீட்டின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கைப்பையுடன் வீட்டினுள் நுழைந்தார்.
இதையடுத்து, அந்த இளைஞரை பின் தொடர்ந்து சென்ற தேர்தல் பறக்கும் படையினர் வீட்டினுள் புகுந்து, சோதனை நடத்தினர். அச்சோதனையில், கைப்பை மற்றும் வீட்டினுள் ரூ.1.22 கோடி இருந்தது.
இதுகுறித்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில் தெரிய வந்ததாவது: அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்டன் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மஞ்சுநாத் என்ற இளைஞர், டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை பணத்தை வசூலித்து, வங்கியில் செலுத்தும் நிறுவன ஊழியர்.
அவர் முகப்பேர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை தொகையை வசூலித்த தொகையோடு, தான் வசிக்கும் பகுதிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அச்சத்தின் காரணமாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனைக்கு ஒத்துழைக்காமல் இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார்.
அவர் கைப்பை மற்றும் வீட்டினுள் வைத்திருந்த ரூ.1.22 கோடி டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை தொகையாகும். இவ்வாறு அந்த விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும், ரூ.1.22 கோடிக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல உதவி ஆணையருமான ஆர்.ஏ.பிரபாகரிடம் ஒப்படைத்தனர்.