மதுரை: மதுரை அருகே திருடு போன ரூ.1 கோடி மதிப்புள்ள பழமையான திருஞானசம்பந்தரின் உலோகச் சிலை மீட்கப்பட்டது.
மதுரை வண்டியூர் அருகே ஏட்டையா தோப்பில் இருந்து பழமையான திருஞானசம்பந்தர் உலோகச் சிலை திருடு போனது. இது தொடர்பாக மதுரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலையைத் தேடினர்.
இந்நிலையில், மதுரை - திருமங்கலம் நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே சிலை தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் அப்பிரிவு போலீஸார் கடந்த 29-ம் தேதி ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில் திருஞானசம்பந்தரின் பழமையான உலோகச் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பீடத்துடன் நின்ற நிலையிலான 3 அடி உயரமும், 52.180 கிலோ எடை கொண்ட இச்சிலை 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வண்டியூர் அருகே திருடுபோனது என்றும், ரூ.1 கோடி மதிப்பிலானது எனவும் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை பஜகஜம் காலனி சேர்ந்த சைவத்துரை மகன் ஜெயவேலன் (48), மதுரை கீழ அண்ணாத்தோப்பு முருகன் மகன் பாண்டியராஜன் (37), எல்லீஸ்நகர் ஜானிபாட்சா மகன் அக்பர் (52) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருஞானசம்பந்தர் சிலை மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட திருஞானசம்பந்தர் சிலை
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரின் இந்த நடவடிக்கையை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் பாராட்டியுள்ளார்.