அகரம்தென் கிராம ஊராட்சியில் ஜெ.ஜெ. நகரில் தேர்தலுக்காக அவசர கதியில் தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் பணி தொடங்கிய கையோடு நிறுத்தப்பட்டது.

 
தமிழகம்

தேர்தலுக்காக அவசர கதியில் தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தம்

பெ.ஜேம்ஸ்குமார்

தாம்பரம் அருகே அகரம்தென் ஊராட்சியில் தேர்தலுக்காக அவசர கதியில் தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் பணி தொடங்கிய கையோடு நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம், அகரம்தென் கிராம ஊராட்சியில் ஜெ.ஜெ. நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது.

அதையடுத்து, சாலைகள் அமைக்கப்படாததால், சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தன. மேலும், சாலை மேடாக இருந்ததால், சாலையை பயன்படுத்தும் மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் பல லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கின. தரமற்ற முறையில் தொடங்கப்பட்ட இப்பணி பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் ஒப்பந்ததாரர் பாதியிலேயே நிறுத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் நேரம் என்பதால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சாலைப் பணி அரைகுறையாக நிறுத்தப்பட்டதால், தற்போது பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக, உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, அந்த பகுதியை சேர்ந்த ராஜாராம் கூறியது: சாலை சீரமைக்கும் பணி தொடங்கியதால் மகிழ்ச்சியடைந்தோம்.

இதில் முதல் கட்டமாக, பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. அதன் பின்னர், ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அதன் பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. தேர்தலில் வாக்கு வாங்க வேண்டும் என்பதால் பணிகள் தரமில்லாமல் அவசர கதியில் பணி தொடங்கியது.

ஆனால், திடீரென சாலை பணி நிறுத்தப்பட்டது. சாலையில் ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதால் பைக் மற்றும் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

மேலும், நடந்து செல்பவர்கள் கால்களையும் ஜல்லி கற்கள் பதம் பார்க்கின்றன. வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால், அந்த பகுதி புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது.

இதன் காரணமாக, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியினை தொடங்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT