மேகேதாட்டு பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில் ஒகேனக்கல்லில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உடன் சுதீஷ் எம்.பி., விஜய பிரபாகரன் உள்ளிட்டோர்.
தருமபுரி: இரு மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினைக்கு நதிகளை இணைப்பதே தீர்வாக அமையும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில் ஒகேனக்கல்லில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி அவர் பேசியது: காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தவெக ஆட்சியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. எனவே, ராகுல்காந்தி கர்நாடகா முதல்வரை சந்தித்து தமிழகத்துக்கு நீர் பெற்றுத்தர வேண்டும்.
அதேபோல் தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்ட முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல வேண்டும். அதேபோல் அம்மாநில முதல்வர் சிவகுமார் தமிழகம் வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியது: இருமாநிலங்களுக்கு இடையில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க நதிகளை இணைப்பதே தீர்வாக இருக்கும். சுயநலத்துக்காக கர்நாடகா கோயிலுக்குச் செல்லும் முதல்வர் மக்களின் பிரச்சினைக்காக போகக் கூடாதா. மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. இவ்வாறு கூறினார்.
முன்னதாக, பிரேமலதா தலைமையில் அக்கட்சியின் சுதீஷ் எம்.பி. இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் பிலிகுண்டுலு பகுதியில் ஆய்வு செய்தனர்.