தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் கவனம் ஈர்த்த அம்சங்கள்:
ஏஐ மூலம் தடையற்ற அரசு சேவை வழங்கப்படும். அரசின் சேவை வழங்கலை மாற்றியமைக்கவும், நிர்வாக பணி பகிர்வை எளிமைப்படுத்தவும், தலைமைச் செயலர் தலைமையில் ஆளுமை செயல்முறைகள் சீர்த்திருத்தக் குழு அமைக்கப்படும். சட்டப்படி உரியநேரத்தில் அனைவருக்கும் சேவைகள் கிடைக்கும் பொருட்டு சேவை உரிமை சட்டம் இயற்றப்படும்.
முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை, அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் ரூ.718 கோடியில் விரிவாக்கப்படும்.
பொதுவிநியோக திட்டம் மூலம் பொட்டலமிட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடி திட்டத்தை ரூ.18 கோடியில் செயல்படுத்தி, விரிவுபடுத்தப்படும். உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.14,830 கோடி, உணவு மானியத்துக்காக ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
சுற்றுச்சூழல்: தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.40 கோடியில் 2500 ஹெக்டேரில் அலையாத்தி காடுகள் புதிதாக உருவாக்கப்படும். நெய்தல் மீட்சி இயக்கத்தை செயல்படுத்த ரூ.322 கோடி ஒதுக்கப்படும். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு ரூ.1,762 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் நிறுவப்படும். 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்க ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போ்ட்டிகளில் சிறந்து விளங்கும் 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.42 கோடியும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2 கோடியும் ஒதுக்கப்படுகிறது.