தமிழகம்

கூடுதல் கட்டண புகார்கள் எதிரொலி: 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறு ஆய்வு

செய்திப்பிரிவு

சென்னை: மின் நுகர்வோரிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட புகார் எழுந்த நிலையில், 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறு ஆய்வு செய்து ஆக.7-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மின்வாரிய தலைவர் அருண் ராய், அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு: கடந்த மே 2026 மாத மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை 2026 மாதத்தில் மின் நுகர்வு மற்றும் கட்டண விகிதம் 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளுக்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மின் இணைப்புகளில் தகுந்த மூத்த அதிகாரிகளை நியமித்து நேரடியாக கள ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மறுஆய்வுப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி தலைமைப் பொறியாளர் 25 மின் இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 மின் இணைப்புகளையும், செயற்பொறியாளர் 75 மின் இணைப்புகளையும், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50 மின் இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இவர்கள் மட்டுமின்றி, உதவி செயற்பொறியாளர் 100, கணக்கு அதிகாரி 150, மூத்த மதிப்பீட்டு அதிகாரி 150, உதவி கணக்கு அதிகாரி 100, மதிப்பீட்டு அதிகாரி 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளையும் நேரடியாகச் சென்று சரிபார்க்க வேண்டும். இந்த நேரடி மறுஆய்வுப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்த ஆய்வுகளின் போது மின் கணக்கீட்டில் ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகள் கண்டறியப்பட்டால், உடனடியாகத் தேவையான திருத்தங்களை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT