பழநி கோயில் நில மோசடி வழக்கில் 84 பேர் சாட்சிகளாக சேர்ப்பு

உயர் நீதிமன்றத்தில் தகவல்
பழநி முருகன் கோயில்
பழநி முருகன் கோயில்
Updated on
1 min read

மதுரை: பழநி கோயில் நில மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 84 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டது.

பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக தனி நபர்கள் பெயருக்கு பதிவு செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திமுக, அதிமுக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இதே மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் அறங்காவலர் அன்னபூரணி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் கடந்த மார்ச் 27-ல் முருகதாஸ் என்பவர் சேதுபதி, வெள்ளைதுரை ஆகியோருக்கு பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான 1.35 ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய முயன்றார். அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மடம் மற்றும் கோயிலை எதிர்மனுதாரராக சேர்க்காமலும், உண்மையை மறைத்தும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்த பத்திரம் பதிவு செய்ய உத்தரவு பெற்றுள்ளார்.

சர்ச்சைக்குரிய சொத்து தொடர்பாக எந்த ஆவணமும் பதிவு செய்யக்கூடாது என பத்திரப் பதிவுத்துறைக்கு எழுத்துபூர்வமாக கடிதம் வழங்கியும், பத்திரம் பதிவு செய்ய ஜூலை 6-ம் தேதிக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் வழங்க அனுமதி வழங்கிய சார் பதிவாளர் பதிவு நாளில் விடுப்பில் சென்ற நிலையில், அலுவலக உதவியாளரும் விடுப்பில் சென்றுள்ளார்.

இந்த மோசடியில் கொடைக்கானல் சார் பதிவாளர் ஆவண எண் வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் வழக்கமான பதிவாளர், அலுவலக உதவியாளர், மாவட்ட பதிவாளர், ஆவண எண் வழங்கிய சார் பதிவாளர் ஆகியோரின் முழு தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டியதுள்ளது.

வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சிகள், டோக்கன் பதிவுகள், மென்பொருள் ஆய்வு, கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு ஆவணம், விடுப்பு பதிவேடு போன்ற அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே, பழநி அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நில பத்திர பதிவு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கௌரி இன்று விசாரித்தார். அரசு தரப்பில், ‘நில மோசடி தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 84 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, இதே கோரிக்கையை முன்வைத்து இரு நீதிபதிகள் அமர்வு முன்பாக நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

பழநி முருகன் கோயில்
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து முதல்வர் விஜய் ஆய்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in