இந்து சமய அறநிலையத் துறை

 
தமிழகம்

பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுவதைத் தடுக்க கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு கட்டுப்பாடு

வழிகாட்டுதலை வெளியிட்டு அறநிலையத் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கோயில்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரும்போது, பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய், அனைத்துச் செயல்அலுவலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை: திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் (விஐபி) கோயிலுக்குத் தரிசனம் செய்ய வருவது தெரிந்தால் குறைந்தது ஒரு நாளைக்கு முன்பே அது குறித்து ஆணையர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அவர்களின் வருகை நேரம் மற்றும் அவர்களுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற முழு விவரத்தையும் கட்டாயம் அளிக்க வேண்டும். விஐபி-க்கள் வருகையின்போது, கோயில் வளாகத்துக்குள் புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.

பிரபலங்களின் வருகையால் பொது பக்தர்களின் தரிசனத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது. அவர்களின் நுழைவு மற்றும் நடமாட்டத்தை முறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும். கோயிலின் புனிதத் தன்மை, மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் மட்டுமே விஐபி-க்களுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

தேவையில்லாத நபர்களைத் தவிர்க்க வேண்டும். இந்த விதிமுறைகளை அனைத்துக் கோயில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித விதிவிலக்கும் இன்றி அனைத்துச் செயல் அலுவலர்களும் மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோயில்களில் விஐபி கலாச்சாரத்தால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்துசமய அறநிலையத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள் ளதாகத் தெரிகிறது.

ஆக.14 வரை சிறப்பு தூய்மைப் பணி

அறநிலையத் துறையின் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும், ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின்கீழ் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் கோயில் சார்ந்த இடங்களிலும் ஆக.10 (நாளை) முதல் 14-ம் தேதி வரை சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, கருவறை, பிரகாரம், மண்டபங்கள், நடைபாதைகளை தூய்மைப்படுத்த வேண்டும். ராஜகோபுரம், விமானங்கள், மதில் சுவர்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை நீக்க வேண்டும்.

கோயில் வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் கட்டிடக் கழிவுகள், தேவையற்ற பொருட்களை உடனே அகற்ற வேண்டும். கோயில்வளாகத்தில் தரை தளம் அமைக்கப்படாத இடங்களில், பழைய மண்ணை அகற்றிவிட்டு செம்மண் நிரப்பி, புல்வெளி அமைத்தும், பூச்செடிகளை நட்டும் பசுமைச் சூழலை உருவாக்க வேண்டும்.

கோயில் குளங்களில் உள்ள பாசிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும். மடப்பள்ளிகளில் பூச்சி, எலித்தொல்லை ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுத்து, தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

கழிவறைகளை தினமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். போதிய தண்ணீர் வசதி, சோப்பு, கிருமிநாசினி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணிகளை தொய்வின்றி முடிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இப்பணிகளை மேற்கொண்டு, அதுபற்றிய அறிக்கையை புகைப்படங்களுடன் ஆணையர்அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT