தமிழகம்

தேர்தல் விதிகளால் மது விற்பனைக்கு கட்டுப்பாடு: ஒரு நபருக்கு அதிகபட்சம் 6 ‘ஃபுல்’ மட்டுமே விற்க வேண்டும்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, டாஸ்மாக்கில் ஒரு நபருக்கு 6 ஃபுல் மட்டுமே விற்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்கம், பரிசுப் பொருட்களைப் பறிமுதல் செய்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு மது கொடுப்பது, மது கொடுத்து வாக்குகளைக் கவர்வது போன்ற செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தல் ஆணையம் மது விற்பனையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் ஒரு நபருக்கு எவ்வளவு மது விற்பனை செய்ய வேண்டும் என்பது குறித்து கடை பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

          

இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள், பணியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மது பாட்டில்களுக்கு கூடுதலாக விற்பனை ரசீது போடக்கூடாது என தலைமை அலுவலகத்தால் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மது விற்பனை முழுமையான கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு மூலம் தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. எனவே குறிப்பிடப்பட்டுள்ள மது பாட்டில்களின் எண்ணிக்கையை விட (லிட்டரில்) கூடுதலாக ஒரே ரசீதில் விற்பனை போடக்கூடாது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம் மொத்தம் 4.5 லிட்டர் அதாவது முழு பாட்டில்கள் (750 மி.லி.)என்றால் 6 வரையும், அரை பாட்டில்கள் (375 மி.லி.) 12 அல்லது கால் பாட்டில்கள் (180 மி.லி.) 24 வரையும் விற்பனை செய்யலாம். அதேபோல் ஒரு நபருக்கு பீர் 7.8 லிட்டர் அதாவது 12 பீர் பாட்டில்களும் (650 மி.லி.), ஒயின் ஒரு நபருக்கு 9 லிட்டர் மட்டுமே விற்கப்படும். மேலும் ஒரே ரசீதில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறிய கட்டணங்கள் இருந்து, அது குறித்து கண்டறியப்பட்டால் விசாரணை, துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT