தமிழகம்

தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்: பாமக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி சர்வே நடத்துவதன் தேவை குறித்து பாமக சார்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூதாயத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடந்தது.

பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தவெக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர், தவாக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினர்.

இதில் பங்கேற்காத திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடிதம் கொடுத்தனர்.

இக்கூட்டத்தில் சாதிவாரி சர்வே உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உரிய தரவுகளை நீதிமன்றத்தில் கொடுத்து 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்.

2008-ம் ஆண்டு புள்ளியியல் சட்டப்படி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒரு சாதிக்கான பிரச்சினை கிடையாது.

அது சமூகநீதி பிரச்சினை ஆகும். முதல்வர் விஜய் என்னுடைய வீட்டுக்கு வந்தபோது, சாதிவாரி சர்வே மிகவும் அவசியம், அந்த தரவுகள் மூலமாகத்தான், மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று நான் தெரிவித்தேன்.

அதற்கு முதல்வர், எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சமூகநீதி அடிப்படையில் எல்லா சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை செல்போனில் தொடர்புகொண்டு, சாதிவாரி கணக்கெடுப்புக்காக நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும், நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் ஆதரவு அளிப்பதாகக் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT