சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: தமிழக அரசு மாநகராட்சிக்கு தேவையான நிதியை ஒதுக்கி, வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதியை விடுவிக்க வேண்டும் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் ஆகஸ்ட் மாத மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்கு வருகை தந்த மேயர், துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வார்டு மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படாததைக் கண்டித்து கருப்பு உடையில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கூட்டம் தொடங்கியதும் ஆளுங்கட்சி தலைவர் (திமுக) ராமலிங்கம் வார்டு மேம்பாட்டு பணிகளுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசியதாவது: துணை மேயர் மு.மகேஷ்குமார்: ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த 4 மாதங்களாக மாநகராட்சி பெரிய தொய்வை சந்தித்து வருகிறது. நிதி நிலைமை சீராக இல்லை. கடந்த 4 மாதத்தில் தமிழக அரசு ரூ.21 ஆயிரம் கோடி கடனாக பெற்றுள்ளது.
மாநகராட்சி ஆணையர் முதல்வரிடம் நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும். அதிமுக உறுப்பினர் சத்தியநாதன்: கடந்த 3 மாதங்களாக வார்டு மேம்பாட்டு நிதி வந்து சேரவில்லை. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
மக்கள் பிரதிநிதிகளாக இருந்தும், மக்களுக்கு பணியாற்ற முடியாத நிலை நீடித்தால், உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டு போகலாம். இதற்கு மேயர் பிரியா பதிலளித்து பேசுகையில், “வார்டு மேம்பாட்டு நிதி என்பது உறுப்பினர்களின் சொந்த செலவுக்கானது அல்ல.
அது நூலகம், உடற்பயிற்சி கூடம், சமுதாய நலக்கூடம் போன்ற பொதுமக்களின் அத்தியாவசியப் பணிகளுக்கானது. நிர்வாக ரீதியான தடைகளால் பல பணிகள் நிலுவையில் இருப்பது உண்மைதான். இதுகுறித்து தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.” என்று தெரிவித்தார்.
இதேபோல் பாஜக, விசிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆணையரிடம் வழங்கப்பட்டது.
குடிநீரில் கழிவு கலப்பு
திமுக உறுப்பினர் ராஜன் பேசுகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலுமே குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்து வருகிறது. அதற்கான ஆய்வறிக்கை என்னிடம் உள்ளது.
மாநகராட்சியின் சுகாதாரத்துறை மூலமாக ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ஆய்வறிக்கையை ஆணையரிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.