சென்னை: அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்து அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கில், பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் உள்ளிட்டோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த மே 13-ம் தேதி தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அவர்கள் 25 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மனு கொடுத்தார்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்துவிட்டு, உடனடியாக தவெகவில் இணைந்தனர்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு மனு கொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களது ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டது சட்ட விரோதம் என்று கூறி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி,
தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். ‘ராஜினாமா செய்த 4 பேரும் மீண்டும் தேர்தலில் பங்கேற்கக் கூடாது. இந்த வழக்கு முடியும் வரை 4 தொகுதிகளில் இடைத் தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தனர்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், “மதியம் 2.30 மணிக்கு ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில் 3.30 மணிக்கு ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்று உடனே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களது ராஜினாமாவை ஏற்கும் முன்பு பேரவைத் தலைவர் உரிய விசாரணை நடத்தவில்லை” என்றார்.
நீதிமன்றம் தலையிட முடியாது
சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “பேரவைத் தலைவர் உரிய விதிகளைப் பின்பற்றியே ராஜினாமா கடிதத்தை ஏற்று, அதை முறைப்படி அறிவித்துள்ளார். பேரவைத் தலைவரின் நடவடிக்கைகளுக்கு கால வரம்பு கிடையாது. குறிப்பாக பேரவைத் தலைவரி்ன் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சட்டப்பேரவையின் எல்லா நடவடிக்கைகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கில் இடைக்காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என மறுப்பு தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட 4 முன்னாள் எம்எல்ஏக்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஜூன் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
பேரவைத் தலைவரிடம் விளக்கம்
இதற்கிடையே, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த 4 பேரிடமும் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் கடந்த ஜூன் 9-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 4 பேரும் சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
பின்னர் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை விதிகளின்கீழ் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, தற்போது அந்த 4 பேரும் நேரில் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள விளக்கங்களை முறையாக ஆய்வு செய்வேன். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
விராலிமலை உட்பட 6 தொகுதிகள் காலி
சென்னை-பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகு, வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், விராலிமலை எம்எல்ஏவாக இருந்த சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரும் இதை ஏற்றுக்கொண்ட நிலையில், அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது.
இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் 6 தொகுதிகள் காலியாக உள்ளன. ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, வரும் நவம்பருக்குள் இந்த 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. பதவி விலகிய விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.