சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குமரி மாவட்டம் கடியப்பட்டணம், குளச்சல், இணையம் மற்றும் முட்டம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 மீனவர்கள் ஈரானில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி, நெல்லை,ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் ஈரானில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால் ஈரானில் எங்கள் சகோதரர்கள் பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கின்றனர்.
எனவே தமிழக மீனவர்களை சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் விரைந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
பாஜகவினர் மனு: ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள், தமிழகம் திரும்ப முடியாமல் ஈரானில் சிக்கி தவிக்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, தமிழகத்துக்கு மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக பாஜக மீனவர் அணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக மீனவர் அணி மாநில தலைவர் ஏ.சீமா, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரோடு நேற்று சென்னையில் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.