குடியரசு தின விழாவில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர். உடன் பேரவைத் தலைவர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர்.
சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.எம்.சுப்ரமணியம், அனிதா சுமந்த் உள்ளிட்ட நீதிபதிகளும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அரசு தலைமைச் செயலர் முருகானந்தம், பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், பார் கவுன்சில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சிறப்பாக பணியாற்றிய நீதித்துறை அலுவலர்களுக்கு தலைமை நீதிபதி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், தேசியக் கொடியேற்றினார்.
விழாவில், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், எம்.தனபால் எம்.பி., சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர்.கமலநாதன், பார் கவுன்சில் உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழக பள்ளி, கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும், பிற மாநிலக் கலைஞர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. | படங்கள்: ம.பிரபு |
சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா. (அடுத்த படம்) பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்.| படங்கள்: எஸ்.சத்தியசீலன் |
தெற்கு ரயில்வே சார்பில், பெரம்பூரில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், தேசியக் கொடியை ஏற்றினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா, எழும்பூர் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகத்தில் அதன் உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீனவா ஆகியோர் கொடி ஏற்றினர்.
தண்டையார்பேட்டையில் உள்ள பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு வளாகத்தில் சென்னை துறைமுக ஆணையத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், காமராஜர் துறைமுக நிறுவன வளாகத்தில் அதன் மேலாண்மை இயக்குநர் ஐரீன் சிந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மத்திய அலுவலகத்தில் அதன் நிர்வாக இயக்குநர் அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா, அயனாவரத்தில் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் மண்டல அதிகாரி விஜயகுமார், சென்னை இந்தியன் ஆயில் பவனில் தமிழக நிர்வாக இயக்குநர் அண்ணாத்துரை, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், விமான நிலைய இயக்குநர் எம்.ராஜா கிஷோர், ஐசிஎஃப் மைதானத்தில் அதன் பொதுமேலாளர் சுப்பா ராவ் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.
மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி. (அடுத்த படம்) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்த ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.
சென்னை தெற்கு ஜி.எஸ்.டி மற்றும் மத்திய ஆயத்தீர்வை ஆணையகத்தில் ஜி.எஸ்.டி ஆணையர் பா.மாணிக்கவேல், நுங்கம்பாக்கத்தில் உள்ள வரு
மானவரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் அதன் ஆணையர் டி.சுதாகர் ராவ் ஆகியோர் கொடி ஏற்றினார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.
நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் நிர்வாக இயக்குநர் மு.அ.சித்திக், தேசியக் கொடியை ஏற்றினார். இயக்குநர்கள் தி.அர்ச்சுனன் (திட்டங்கள்), எஸ்.கிருஷ்ண மூர்த்தி (நிதி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகர போக்கு வரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் இணை மேலாண்மை இயக்குநர் ராம.சுந்தரபாண்டியன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் வனத்துறை தலைவர் சீனிவாஸ் ஆர் ரெட்டி, சென்னை குடிநீர்வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், சென்னை சிஐடி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் துணைவேந்தர் டாக்டர் உமா சேகர் ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினர்.
கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில் துணைவேந்தர் கே.நாராயணசாமி கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் டீன் சாந்தாராமன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் மதிவாணன், எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனையில் இயக்குநர் சுமதி, கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் இயக்குநர் மகாலட்சுமி, அரசு மனநல காப்பக இயக்குநர் மலையப்பன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.
ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் ஹரிஹரன், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் டீன் அரவிந்த், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் கவிதா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
மருத்துவமனைகளில் நடந்த குடியரசு தின விழாவில், சிறப்பான சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. கவிதை, கட்டுரை, விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.