தமிழகம்

பிரதிநிதித்துவம் தந்தால் திமுகவுடன் கூட்டணி: நிபந்தனை விதிக்கும் எஸ்டிபிஐ

அ.அருள்தாசன்

கடந்த தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த எஸ்டிபிஐ கட்சி, இம்முறை அந்த கூட்டணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டது. பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் எஸ்டிபிஐ வெளியேறியது. அதைத் தொடர்ந்து திமுக கூட்டணி பக்கம் அக்கட்சி செல்லும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கேற்பவே சந்திப்புகளும் நிகழ்வுகளும் நடக்க ஆரம்பித்துள்ளன.

திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் கலந்து கொண்டார். அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் முபாரக்கும் இதில் பங்கேற்றார். அழைப்பிதழில் இல்லாததாலோ என்னவோ அவரது பெயரை யாரும் உச்சரிக்கவில்லை. ஆனால் முதல்வர், மறக்காமல் முபாரக் பெயரை உச்சரித்தார்.

இதையடுத்து, முதல்வரை மறுநாள் காலை அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று முபாரக் சந்தித்தார். இந்தச் சந்திப்பை அடுத்து திமுக கூட்டணியில் பாளையங்கோட்டை தொகுதியில் முபாரக் போட்டியிடப் போவதாக செய்திகள் பறக்க ஆரம்பித்திருக்கின்றன.

இதுகுறித்து முதல்வரை சந்திக்க முபாரக்குடன் சென்றிருந்த திருநெல்வேலி மாநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் பீர்மஸ்தானிடம் கேட்டதற்கு, “ஜனவரியில் நடைபெறவுள்ள கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். எஸ்டிபிஐ கட்சி, தவெக பக்கம் சென்று விடக்கூடாது என்று திமுக விரும்புகிறது. திமுக-வுடன் கூட்டணி அமைத்தால் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அவர்கள் அளிக்க வேண்டும். இதயத்தில்தான் இடமிருப்பதாகச் சொன்னால் நாங்கள் வேறு கூட்டணிக்குச் செல்லும் நிலை உருவாகலாம். திமுக, தவெக உள்ளிட்ட பல கட்சிகளும் எங்களுடன் தொடர்பில் தான் உள்ளன” என்றார்.

இதனிடையே எஸ்டிபிஐ கட்சி தலைவரின் பேட்டி, அவரது நிகழ்ச்சிகள் குறித்து இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த ஆளும் கட்சி ஆதரவு சேனல் தற்போது வரிந்துகட்டிக் கொண்டு அவரது செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. இதையும் கூட்டணிக்கான அச்சாரமாக சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

SCROLL FOR NEXT