சென்னை: நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் மற்றும் நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் வடக்கு மாட வீதியில் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமாக நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் 107 சதுர அடி பரப்பளவிலான வணிகக் கட்டிடம், வடக்கு மாட வீதியில் 2,787 சதுர அடி மற்றும் 2,953 சதுர அடி பரப்பளவிலான 2 குடியிருப்புக் கட்டிடங்கள், 1,443 சதுர அடி பரப்பளவிலான அடிமனை குடியிருப்பு மற்றும் நுங்கம்பாக்கம் டேங்க் பண்ட் சாலையில் 1,659 சதுர அடி பரப்பளவிலான அடிமனை குடியிருப்பு ஆகியவை உள்ளன.
இந்தச் சொத்துகள் தனிநபர்களுக்கு மாத வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், வாடகை தாரர்கள் பல ஆண்டுகளாகக் கோயில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்தாமல் ரூ.86 லட்சத்து 87 ஆயிரத்து 715 நிலுவை வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால், கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதையடுத்து, நிலுவை வாடகையை வசூலிப்பதுடன், ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் சொத்துகளை மீட்க இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் ஜெகந்நாதன் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், போலீஸார் இணைந்து சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் மற்றும் நிலங்களை மீட்டனர். இதன் மூலம் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் மீண்டும் கோயில் நிர்வாகத்தின் சுவாதீனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. மீட்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.