

சென்னை: நகைக்கடைகள் மற்றும் அடகு கடைகளில் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், சிசிடிவி கேமரா பதிவுகளைக் குறைந்தது 6 மாதங்கள் கட்டாயம் பாதுகாக்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்குச் சென்னை காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
சென்னை காவல் துறை சார்பில், திருவல்லிக்கேணி பகுதிகளில் செயல்பட்டு வரும் தங்க நகைக் கடைகள் மற்றும் அடகு கடைகளின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் வி.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் நகைக் கடை, அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடைகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸார் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
அதன்படி, கடைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், பணப் பரிவர்த்தனை நடைபெறும் இடங்கள், நகைகள் வைக்கப்படும் பகுதிகள் மற்றும் பாதுகாப்புப் பெட்டகங்கள் உள்ள இடங்களில் தரமான சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். கடைக்கு வரும் நபர்களின் முகங்களைத் தெளிவாக அடையாளம் காணும் வகையில் கேமராக்களை அமைப்பதுடன், அவற்றின் பதிவுகளைக் குறைந்தது 6 மாதங்கள் வரை பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் தடையின்றிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களின் ஆதார் அட்டை, புகைப்படம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களைப் பெற்று, அவர்களின் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். இரவு நேரங்களில் கடைகளில் அதிக அளவிலான பணத்தை வைத்திருக்கக் கூடாது. தங்க நகைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி கடைக்கு வந்து நகைகளை வாங்காமல் கடையை நோட்டமிடுபவர்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான நபர்களைக் கண்காணிக்க வேண்டும்.
அடகு கடைகளைப் பொறுத்த வரை, நகைகளை அடகு வைக்க வருபவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை முறையாகச் சரிபார்க்க வேண்டும். வாடிக்கையாளர்களின் அடையாள ஆவணங்களைப் பெற்று, அவர்களின் முழு விவரங்களையும் பதிவு செய்வதுடன், அடகு வைக்கப்படும் நகைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான பதிவுகளையும் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
குறிப்பாக, சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் நகைகளை அடகு வைக்க வருபவர்கள் மற்றும் ஒரே மாதிரியான நகைகளைத் தொடர்ந்து அடகு வைக்க வருபவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருட்டு நகைகள் எனச் சந்தேகம் ஏற்பட்டால், அவற்றை உரிய சரிபார்ப்பின்றி ஏற்றுக்கொள்ளாமல் உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.