திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என இந்தி, ஆங்கிலம், தமிழில் இருந்த எழுத்துகள். (அடுத்த படம்) திமுகவினர் போராட்டத்தை தொடர்ந்து அகற்றப்பட்ட எழுத்துகள்.
திருச்சி: திமுகவினர் போராட்டத்தைத் தொடர்ந்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த ‘கர்தவ்ய த்வார்’ இந்தி பெயர் உடனடியாக நீக்கப்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக நுழைவு வளைவு கட்டப்பட்டது. இதில் ‘கர்தவ்ய த்வார்’ என இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றில் மொழி பெயர்ப்பு செய்யப்படாமல், இந்தியின் உச்சரிப்பிலேயே பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
இதற்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து அந்த அலுவலகம் முன் நேற்று ஏராளமான திமுகவினர் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கட்சியின் திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி தலைமை வகித்தார். மேற்கு மாநகரச் செயலாளர் மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
அப்போது, மத்திய அரசு இந்தியை திணிப்பதாகக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பியதுடன், அதில் இருந்த இந்தி எழுத்தை கருப்பு பெயின்ட் கொண்டு அழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த நுழைவு வாயிலின் பெயரை ‘கடமையின் நுழைவுவாயில்’ என தமிழில் மாற்றியமைக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தார்.
மேலும், நுழைவு வாயிலில் இருந்த ‘கர்தவ்ய த்வார்’ என இந்தி, ஆங்கிலம், தமிழில் இருந்த எழுத்துகள் உடனடியாகஅகற்றப்பட்டன.