அமைச்சர் ரமேஷ் | கோப்புப் படம்
திருச்சி: தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இடமில்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் அனுமதிக்கப்பட்ட சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைவிட கூடுதலாக வசூலித்தால், பொதுமக்கள் என் கவனத்துக்கு கொண்டு வரலாம். கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் நிர்வாகத்தை சரிசெய்து, மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் உடனடியாக தேவை என்பதை வரையறுத்து, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து, டெண்டர் வெளியிட்டு நிறைவேற்றி வருகிறோம்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவித்தால், அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். திருவண்ணாமலை கோயிலுக்குள் மாற்று மதத்தினர் செல்வதற்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே, தமிழக பொதுப்பணித் துறை அமைச்சரின் உதவியாளர் சென்றார்.
தமிழகம் மதச்சார்பற்ற சமூக நீதிக்கான மண். தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்வோருக்கு இடமில்லை. அனைத்து மதத்தினரும் நம் மதத்தினர் என்ற கோட்பாட்டுடன் முதல்வர் விஜய் ஆட்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.