புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் | கோப்புப் படம் 
தமிழகம்

“விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு சரியே” - புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்

அ.முன்னடியான்

புதுச்சேரி: தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பது என்பது சரியே என்று புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலி மருந்து தொழிற்சாலை தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், வைத்திலிங்கம் எம்.பியும் என்மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.

2010-ல் முதன்முதலில் எனது தொகுதிக்குட்பட்ட அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் வைத்திலிங்கம் உறவினர் இடத்தில் அந்த மருந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிமத்தை வைத்திலிங்கம் வழங்கி இருக்கின்றார்.

அதன்பிறகு 2017-ல் நாராயணசாமி முதல்வராகவும், வைத்திலிங்கம் சட்டப்பேரவை தலைவராகவும் இருந்தபோது திருபுவனை பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்மையில் போலி மருந்து சம்மந்தமாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது ஏன்? நாராயணசாமி, வைத்திலிங்கம் வாய் திறக்கவில்லை. அந்த மருந்து தொழிற்சாலைக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த மருந்து தொழிற்சாலையின் 50 சதவீத பங்குதாரர் யார்? என்பது குறித்து நாராயணசாமி வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களிடம் விளக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் பாலன் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்பேரவையிலும், வெளியேயும் போலி மருந்து சம்மந்தமாக புகார் கூறி வந்தார். அன்று நாராயணசாமி எங்கு சென்றிருந்தார். ஏன்? அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.

என்னுடன் ஆண்டியார்பாளையம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜா என்பவர் தான் இருக்கின்றார். மதுரை ராஜா என்பவர் குறித்து ஆதாரம் அளித்தால் அதற்கு நான் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றேன்.

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியை கண்டு அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. ஆகவே தான் என் மீதும், முதல்வர் மீதும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். போலி மருந்து தொழிற்சாலை சம்மந்தமாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் எனக்கு ஏதேனும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். பிரதமர் நரேந்திர மோடி எங்களை தெளிவாக வழிநடத்தியுள்ளார். யாருக்கும் பயந்து பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.

போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை முழுமையாக துணைநிலை ஆளுநர் கையில் எடுத்துள்ளார். இதில் உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள். என்னுடைய அறை எப்போதும் பொதுமக்களுக்காக திறந்தே இருக்கும். யாரும் அனுமதி வாங்கிக்கொண்டு வர வேண்டும் என்று இல்லை. நாராயணசாமிக்கும், வைத்திலிங்கத்துக்கும் பொய்யான தகவலை கூறுவதே வேலையாக உள்ளது.

ரூ.669 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக நிதியமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளேன். முதல் கட்டமாக ரூ.100 கோடி கேட்டுள்ளேன். பணியை இந்த ஆட்சிக்குள் தொடங்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம். விரைவில் தொடங்குவோம்.

புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பது என்பது என்னை பொருத்தவரை சரியான முடிவு என்று தோன்றுகிறது. ஏனெனில், கரூரில் பெரிய இழப்பு நிகழ்ந்துள்ளது.

புதுச்சேரியில், தமிழகம் போன்ற விரிந்த சாலைகள் கிடையாது. மேலும் தவெகவினர் அனுமதி கேட்ட சாலையும் மக்கள் நடமாட்டம் அதிகமான சாலை. ஆகவே, விஜய் ரோடு ஷோவை தவிர்த்து, உப்பளம் மைதானம் உள்ளிட்ட எதேனுமொரு இடத்தில் வேண்டுமானால் கூட்டம் நடத்தலாம். அதனை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT