சென்னை: கிராம ஊராட்சிகளில் பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்களை ஊராட்சி மன்றத் தலைவர்கள் தன்னிச்சையாக நியமிக்கக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என்றும் ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் வி.அமுதவல்லி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (சென்னை நீங்கலாக) மற்றும் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் எண்ணிக்கை 40,419-க்கு மிகாமல் இருக்க வேண்டுமென ஏற்கெனவே அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான தொகுப்பூதியத்தை கடந்த ஜன.30-ம் தேதி ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு வகையான ஊதியம் வழங்கப்படுவதாகப் புகார்கள் வருகின்றன.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, இவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.5000, தற்காலிக உயர்வு மற்றும் சிறப்புப் படி என மொத்தம் ரூ.6,700 ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், தற்போது ஊதியம் வழங்குவதற்கான ஊராட்சி கணக்கு மாற்றப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான நிலுவைத் தொகையை கடந்த ஜன.30-ம் தேதி முதல் கணக்கிட்டு, ஊராட்சியின் நிதிநிலைக்கு ஏற்ப தவணை முறையிலோ அல்லது ஒரே தவணையிலோ வழங்க வேண்டும்.
ஆபரேட்டர்களுக்குக் குழு காப்பீட்டுச் சந்தாவை மாதந்தோறும் கட்டாயம் பிடித்தம் செய்து, அதற்கான ரசீதை வழங்க வேண்டும். அதேபோல், நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். அந்த வயதைக் கடக்கும்போது அவர்களுக்குப் பணி ஓய்வு அளிக்கப்பட வேண்டும்.
இவர்கள் அனைவருக்கும் பணிப்பதிவேடு தொடங்கப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊராட்சியின் வருகைப் பதிவேட்டில் தினசரி வருகையைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
ஊராட்சிகளில் தேவைக்கு அதிகமாக தன்னிச்சையாக ஊராட்சி மன்றத் தலைவர்களால் ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
இனிவரும் காலங்களில், புதிய பணியாளர்களை நியமிக்க தேவை இருப்பின் கிராம ஊராட்சியில் தீர்மானம் இயற்றப்படுவதுடன், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்ற பின்னரே பணியமர்த்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.