அமைச்சர் வெங்கடரமணன்
சென்னை: “குற்றங்கள் குறையும்போது நுகர்வோர் நீதிமன்றங்கள் குறைவதுதான் சரியானது” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசும்போது, “தமிழகத்தில் 32 நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதை, 14 நீதிமன்றங்களாக குறைப்பதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு எண்ணிக்கைகள் சில இடங்களில் குறைந்துள்ளதாகவும், சொந்த கட்டிடங்களில் நீதிமன்றம் இயங்கவில்லை. எனவே, நிதிச் சுமையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றத்தை, திருவண்ணாமலைக்கு மாற்றப் போவதாக தகவல்கள் வருகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களை மாற்றக் கூடாது” என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன், “நுகர்வோர் தொடர்பான வழக்குகள் குறைவதை எண்ணி நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு குறைவாக இருக்கிறது என்றால் மக்கள் விழிப்புணர்வாக இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் தவறு செய்ய முடியாது என்பதால், விற்பனை மையங்கள் தவறு செய்யக் கூடாது என்பதில் முனைப்பாக இருக்கின்றன. இதன் காரணமாக நுகர்வோர் நீதிமன்றங்களில் குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்கள் குறையக் குறைய நுகர்வோர் நீதிமன்றங்கள் குறைவதுதான் சரியானது. குற்றங்கள் அதிகரிக்கும்போது நீதிமன்றங்கள் அதிகப்படுத்தப்படும்” என்றார்.