சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு நாளை (அக்.25) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.
மேலும் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, நாளை (அக்.25) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 26-ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாகவும் மாறக்கூடும். இது மேலும் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆந்திரப் பிரதேச கடலோரப்பகுதிக்கு அருகில் 28-ம் தேதி காலை நகரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (அக்.24) நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, மதுரை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ரெட், ஆரஞ்சு அலர்ட்...
தமிழகத்தில் நாளை (அக்.25) தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்.26-ம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.25) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 25 செ.மீ, கீழ் கோத்தகிரி எஸ்டேட்டில் 20 செ.மீ, குன்னூரில் 17 செ.மீ, அழகரை எஸ்டேட்டில் 16 செ.மீ, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அர்னாப்’ புயல்: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 26-ம் தேதி புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு ‘அர்னாப்’ என பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயரை வங்கதேசம் பரந்துரை செய்துள்ளது.
அர்னாப் என்ற சொல்லுக்கு வங்க மொழியில் பெருங்கடல் என்று பொருள். அதற்கு அடுத்து உருவாகும் புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என தமிழ்ப் பெயர் வைக்கப்பட உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார்.