தமிழகம்

புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்: 60 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு வருகை!

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு புதுச்சேரி வந்தது.

தென்மேற்கு வங்கக்கடலில் டித்வா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் புதுச்சேரியை நோக்கி நகரும் என்றும் இதனால் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழு அரக்கோணத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்துள்ளது. இக்குழுவை பார்வையிட்ட ஆட்சியர் குலோத்துங்கன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதிக மழைப் பொழிவு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். 60 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு வந்துள்ளது.

24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. 112, 1070, 1077 கட்டணமில்லா தொலைபேசி மூலம் மக்கள் புகார்கள் தெரிவிக்கலாம். கடந்த மழையில் தண்ணீர் தேங்கிய 70 இடங்களில் பொதுப்பணித்துறை- உள்ளாட்சித்துறை மூலம் தற்காலிக மோட்டார் பம்புகள் தண்ணீரை வெளியேற்ற வைத்துள்ளோம்.

ஜேசிபிகளை 46 இடங்களில் தயாராக வைத்துள்ளோம். மக்கள் தங்க 312 இடங்களில் இடங்கள் வைத்துள்ளோம். மக்களுக்கு உணவு தர ஏற்பாடு செய்துள்ளோம்.

அவசரகாலத்தில் உடன் உதவும் குழு 16 அமைத்துள்ளோம். இக்குழுவில் வருவாய்துறை, போலீஸ் உள்பட பல்வேறு துறையினர் இடம் பெற்றுள்ளனர். யாரும் மழையில் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு கோரியுள்ளோம்.

இடி, மின்னல் சமயங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அத்தியாவசியப் பொருட்களான ரொட்டி, பால், பிரட் போன்ற பொருட்களை இன்றே வாங்கிக் கொள்ளுங்கள்.” என்றார்.

SCROLL FOR NEXT