சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது 26-ம் தேதி புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கக் கூடும். இதனால் தமிழகத்தில் இன்று நெல்லை, குமரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென் தமிழகப் பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வட தமிழக கடலோரப் பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
மத்திய கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (23-ம் தேதி) உருவானது. இது இன்று (24-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 25-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 26-ம் தேதி புயலாகவும் வலுப்பெறும். அதற்கடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று, வட மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையைக் கடக்கக் கூடும்.
இவற்றின் தாக்கத்தால் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிமிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனிமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
நாளை (25-ம் தேதி) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 16 செ.மீ., சின்னகாமன்பட்டியில் 14 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராப்பட்டியில் 13 செ.மீ., கடலூர் மாவட்டம் குப்பநத்தம், விருதாச்சலம், மதுரை மாவட்டம் கல்லிக்குடி, திருவாரூர் மாவட்டம் கொடவாசலில் தலா 11 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் நத்தம், கொடைக்கானல், நடுமண்டலம், மதுரை, வாடிப்பட்டி, புதுச்சேரி திருக்கனூர், ஈரோடு மாவட்டம் சவந்தபூர், தேனி மாவட்டம் சின்னஓவலபுரம் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.