தமிழகம்

பார் கவுன்சிலில் ஒரே நாளில் 4,700 பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்து சாதனை

நீதிபதிகள் வி.மோகனா, எஸ்.ஏ.தர்மாதிகாரி உத்வேக உரை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டப்படிப்பை முடித்த 4,700 சட்டப் பட்டதாரிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் இன்று ஒரே நாளி்ல் வழக்கறிஞர்களாக தங்களை பதிவு செய்து கொண்டனர். ஒரே நாளில் 4,700 பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நடந்த இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செஞ்சி கே.கதிரவன் வரவேற்றார். புதிய வழக்கறிஞர்கள் பதிவை பார் கவுன்சில் வழக்கறிஞர் சி.கே.சந்திரசேகர் முன்மொழிய, புதிய வழக்கறிஞர்கள் பதிவு கமிட்டி தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன் உறுதிமொழி பிரமாணம் வாசிக்க, இளம் வழக்கறிஞர்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.மோகனா வாழ்த்திப் பேசுகையில், “38 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நவ.11 அன்று தான் நானும் வழக்கறிஞராக இதே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்தேன். அந்த நினைவலைகள் தற்போதும் என் கண்முன்னால் வந்து செல்கின்றன. இளம் வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ள உங்களுக்கு நீதித்துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. வானமே உங்களுக்கு எல்லை.

வழக்கறிஞர்கள் தொழில் நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் வெற்றி தானாக கிடைக்கும். வழக்கறிஞர் தொழிலில் கண்ணியம், நேர்மை தான் மிகவும் முக்கியம். ஒருபோதும் கட்சிக்காரர்களை தவறாக வழிநடத்தவோ, அவர்களுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கவோ கூடாது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிரபலமாகி வரும் காலகட்டத்தில், அதை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

உங்களுக்கு வழக்குகளில் வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக சோர்ந்து போய் விடக்கூடாது. உங்களது வாதத்தில் நீங்கள் எந்த இடத்தில் தவறு செய்துள்ளீர்கள் என்பதைக் கண்டறி்ந்து அதை திருத்திக் கொண்டால் கைநழுவிப்போன வெற்றி தானாக வந்து சேரும். இன்றைய இளைய தலைமுறை மிகவும் திறமைசாலிகள். அந்த திறமையை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்தி வாழ்வில் மேம்பட வேண்டும்” என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பேசுகையில், “கண்ணியமிக்க நீதித்துறையின் சேவகர்களாக பொறுப்பேற்றுள்ள இளம் வழக்கறிஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வழக்கறிஞர்கள் தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. தினமும் படிப்பது மட்டுமே ஒரு நல்ல, திறமையான வழக்கறிஞரின் அடையாளம்” என்றார்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, என். சதீஷ்குமார், ஜி. கே.முத்துக்குமார் ஆகியோர் பேசுகையில், மதிப்பும், மரியாதையும் உள்ள சட்டத்தொழிலில், தர்மத்தை நிலைநாட்டக்கூடிய உண்மையும், நேர்மையும், கடின உழைப்பும் இருந்தால் வாழ்வில் வெற்றியை தனதாக்கிக் கொள்ள முடியும் என்றும், இளம் வழக்கறிஞர்கள் யாருக்கும் அநீதி இழைக்காமல், பாகுபாடு பார்க்காமல், அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளுடன் மனசாட்சிக்கு விரோதமின்றி சமூக நலனைக் காப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்றனர்.

இந்நிகழ்வில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் பதிவுக் கமிட்டி உறுப்பினர்கள் கே.தமிழ்வாணன், டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு உள்ளிட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர். பார் கவுன்சில் துணைத் தலைவர் இ.பாலமுருகன் நன்றி கூறினார். முன்னதாக பார் கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி வி. மோகனா உள்ளிட்ட நீதிபதிகளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT