சென்னை: மாத தொகுப்பூதியம் 1500-லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச் (RCH) தூய்மைப் பணியாளர்களின் மாத தொகுப்பூதியத்தை ரூபாய் 1500 லிருந்து ரூ 5000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். அதற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், அந்த அறிவிப்பு இதுவரை நடைமுறை படுத்தப்படவில்லை. அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு, 2025 ஏப்ரல் மாதம் முதல், மாதத் தொகுப்பூதியம் ரூபாய் 5000 வழங்கிட வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக ( MPHW) தகுதிப் பெற்று, காத்திருப்புப் பட்டியலில் உள்ள 500 க்கும் மேற்பட்ட ஆர்.சி.எச் தூய்மை பணியார்களை விரைவில் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக, பணி நியமனம் செய்ய வேண்டும். பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்களாக, பணி பெற தகுதியற்றவர்களாக 736 ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது வருத்தமளிக்கிறது. அவர்களது நீண்ட கால பணியை கருத்தில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி, பரிசீலனை செய்து முடிந்த வரையில் அவர்களுக்கும் பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக பணி வழங்கிட வேண்டும்.
மாநிலத்தில் இருக்கின்ற காலி இடங்களை காண்பித்து, கலந்தாய்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் இடங்கள், பிற மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை அறிவித்து, அவற்றை நிரப்பிட வேண்டும்.
அரசாணையில் அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று தான் உள்ளதே தவிர கல்வி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றில்லை. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த ஆர்.சி.எச் தூய்மைப் பணியாளர்களுக்கு, அரசாணை விதிகளின் படி அனைவருக்கும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (MPHW) வேலை வழங்கிட வேண்டும்.
அறுபது வயது நிரம்பிய ஆர்.சி.எச் தூய்மை பணியாளர்கள் 210 பேர் உள்ளனர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உறுதி அளித்தபடி, அவர்களுக்கு பணிக்கொடை அளித்து பணி ஓய்வு வழங்கவேண்டும். அல்லது 2017 ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையையும் வழங்கி பணி ஓய்வு தரப்பட வேண்டும். தொடர்ந்து அவர்களிடம் குறைந்த ஊதியத்தில் வேலை வாங்குவதை தவிர்த்திட வேண்டும்.
இந்தக் குறைவான 1500 ரூபாய் தொகுப்பூதியத்தை கூட கள்ளகுறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கடலூர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிகவும் கால தாமதமாகவே தொடர்ந்து நீண்டகாலமாக வழங்கப்படுகின்றது. இந்த ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். தாமதமின்றி, மாதா மாதம் உரிய நேரத்தில் ஊதியம், ஊதிய பாக்கியை வழங்க வேண்டும்.
ஆர்.சி.எச்.தூய்மை பணியாளர்கள் / பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு ஈஎஸ்ஐ ( ESI) பி.எஃப் (PF) வழங்குவதோடு, ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, தேசிய விடுமுறை வழங்கிட வேண்டும். ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு , ஒரு நாள் காஷுவல் விடுப்பு வழங்கிட வேண்டும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலை வழங்கிட வேண்டும். பணியாளர் அடையாள அட்டை, இலவச சீருடை வழங்கிட வேண்டும்.
கரோனா ஊக்கத்தொகை வழங்கப்படாத, மீதமுள்ள 459 பேருக்கு, கரோனா ஊக்கத்தொகை தலா ரூபாய் 15,000 வழங்கிட வேண்டும். பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதி வழங்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வெவ்வேறு மாவட்டங்களில் , ஏற்றத்தாழ்வுடன் தினக்கூலியாக 350 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட்டு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். குறைந்த பட்ச ஊதியச் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
மாதம் 27 நாட்களே பணி வழங்கப்படுவதை மாற்றி 30 நாட்களும் பணிநாட்களாக அறிவித்து பணிவழங்கிட வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களில் பலர் தினமும் 2 முதல் 3 மணி நேரம் வெகு தூரம் பயணம் செய்து, அதிகப் பயணச் செலவு செய்து, நெடுந்தொலைவுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்து வருகின்றனர். அவர்களின் இன்னல்களை போக்கும் வகையில், அவர்கள் விருப்பபடி மாவட்ட அளவில் பணி மாறுதல் வழங்க வேண்டும். கட்டாயமாக வழங்கப்பட்டுள்ள ( Deputation ) மாற்றுப்பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (21.12.2025 ஞாயிறு ) சென்னை சிவானந்தா சாலையில், தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச் ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் உண்ணாநிலை அறப்போராட்டம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்றது.
இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச் ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.எஸ்.செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இரா.முத்தரசன் உண்ணாநிலை போராட்டத்தை முடித்து வைத்து நிறைவு உரையாற்றினார்.