தமிழகம்

“அதிமுகவை கைவிட்டோருக்கே பாவம் வந்து சேரும்!” - சபிக்கும் ஆர்.பி.உதயகுமார்

என்.சன்னாசி

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்துள்ள நிலையில், “கட்சியால் செல்வாக்கு, விலாசம் பெற்றவர்கள் அதிமுக-வை கைவிட்டால் அவர்களுக்கு பாவம் சேரும்” என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் சபித்துள்ளார்.

ஜெயலலிதா பேரவை சார்பில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக-வின் திண்ணைப் பிரச்சாரம் நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி‌.உதயகுமார் கூறியதாவது: சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் பொய் பேசுவதில் கின்னஸ் சாதனை படைக்கிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டுவந்ததாகக் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இத்தொகுதி தன்னிறைவு பெற்று இருந்தது.

பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அப்போது மனைவி, மகன் என அனைவருக்கும் முதல்வர், துணை முதல்வர் பதவிகளைக் கொடுத்து குடும்ப அரசியல் செய்த அவர், பாலியல் சம்பவம், வன்முறை, துப்பாக்கி கலாச்சாரம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என காட்டாட்சி நடத்தினார். இதற்கெல்லாம் மக்கள் சரியான தீர்ப்பு கொடுத்தனர். அதுபோன்ற நிலைதான் தமிழகத்துக்கும் வரும்.

அதிமுக-வில் அமைச்சர் பதவியிலும், கட்சிப் பொறுப்பிலும் அமர்ந்து அதிகாரம், செல்வாக்கு விலாசம் பெற்றவர்கள் அதிமுகவை கைவிட்டால் அதனால் அதிமுக-வுக்கு பாவம் கிடையாது. அவர்களுக்குத்தான் பாவம் வந்து சேரும். அதிமுக-வால் பலன், முகவரி பெற்றவர்கள் அதிமுக-வை கைவிட்டால் எதிர்காலம் உங்களுக்கு இல்லை.

அதிமுக-வுக்கு இனி எதிர்காலம் இல்லையா என்று கேள்வி கேட்பவர்களுக்கு, அதிமுக-வுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் இனி எதிர்காலம் பழனிசாமி என, வெற்றி வரலாறு படைக்கப் போகிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் இதுபோன்ற சோதனைகளைக் கடந்துதான் வென்றார்கள்.

ஊராட்சிகள் தோறும் மரம் நடுவதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அதிலும் ஊழல் நடந்துள்ளது. ஆட்சியர்கள் இந்த முறைகேட்டை ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில் அதிமுக ஆட்சிக்கு வரும்போது, விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT