

அடுத்ததாக அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் சேரப் போகிறவர்களைச் சொன்னால் பிரச்சினை உருவாகும் என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று முன் தினம் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். அவருக்கு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:
நேற்று தான் கட்சியில் இணைந்துள்ளேன். இன்றைக்கு சொந்த நிகழ்வுக்காக கோவை செல்கிறேன், அதில் கலந்து கொண்டு வந்த பின், விஜய்யுடன் கலந்து பேசி தவெக மக்கள் சந்திப்பு பிரச்சாரங்கள் தொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
நான் எப்படி செயல்பட்டு இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். எந்த நிலையில் நின்று பாடுபடுவேன் என்று நீங்கள் அறிவீர்கள். அந்த நிலையில் நின்று ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றி நடைபோடுவதற்கு அயராது உழைப்பேன்.
இன்றைக்கு மக்கள் இருக்கும் மனநிலை என்னவென்றால் தமிழகத்தை புதிய இயக்கம் ஆள வேண்டும் என்பதே. அதற்கேற்ப மக்களால் நேசிக்கப்படுகிற தலைவராக தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பணிகளை ஆற்றிவருகிறார்.
முதன் முதலில் எம்ஜிஆர் இயக்கத்தை தொடங்கிய போது, திரைப்படம் போல் 100 நாள் தான் ஓடும் என்று சொன்னார்கள். ஆனால், அவருடைய ஆட்சி என்பது இறுதிவரை யாராலும் வெல்ல முடியாத ஆட்சியாக இருந்தது. எம்ஜிஆர் வழியில் விஜய்யும் இன்று அவருடைய பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அந்தவகையில் 2026 என்பது மக்கள் சக்தியால் விஜய் ஆட்சி பீடத்தில் அமரும் காலமாக உருவாகும். என்னைத் தொடர்ந்து அதிமுக-விலிருந்து யாரும் தவெக-வில் சேர்வார்களா என்றால், அதை இப்போது சொன்னால் பிரச்சினை தான் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அதிமுக இரு பிரிவுகளாக பிரிந்து இருந்தபோது, நான் ஜெயலலிதா அணியில் இருந்தேன். இப்போது தவெக தலைவரும், நாளைய முதல்வருமான விஜய் உடன் இருக்கிறேன். திராவிட இயக்கத்தை மீண்டும் தமிழகத்தில் உருவாக்க எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், மக்கள் சக்தியோடு எங்கள் பணிகள் அமையும்.
தமிழகத்தில் ஒரு மாற்றத்தை, புதிய சமுதாயத்தை உருவாக்க, ஒரு நேர்மையான ஆட்சியை உருவாக்க விஜய் புறப்பட்டு இருக்கிறார். அவரது வெற்றிப்பயணம், மக்களுக்கு சேவை செய்வதாக இருக்கும். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை தூக்கி எறிந்து விட்டு மக்கள் சேவைக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். தமிழகத்தில் ஒரு புனித ஆட்சியை கொண்டுவர இந்த இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நான் இடம்பெற்று இருக்கிறேன். என் உயிர் மூச்சு உள்ளவரை இவர்களுடன் இருப்பேன்” என்றார்.