படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியுடன், கோதுமை மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.14,300 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் குடும்ப அட்டைதார்களுக்காக அறிவிக்கப்பட்டவை:
தரமான பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் கறப்பதில் உள்ள ஆள்பற்றாக்குறையை குறைக்கவும், ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் 150 பயனாளிகளுக்கு நவீன பால் கறக்கும் இயந்திரங்கள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.
மேலும் பால் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் அல்லாத கால்நடை விவசாயிகளுக்கு ரூ.75 விழுக்காடு மானியத்தில் 3450 கறவைப் பசுக்களும், மாட்டுத் தீவனம் மற்றம் 4 ஆயிரம் கன்றுகளுக்கு கன்றுத் தீவனம் வழங்கப்படும்.
புதுச்சேரியில் உள்ள மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அரிசியின் அளவை மாற்றியமைத்து, அரிசியுடன், கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை மற்றும் நெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை தொகுப்பாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாண்லே நிறுவனத்தில் முழுமையான தானியங்கி வசதி கொண்ட தினமும் இரண்டு லட்சம் பாலை ( 2 எல்எல்பிடி) சுத்திகரித்து, பேக்கிங் செய்யும் திறன் கொண்ட பால் பண்ணை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையை, பாலின் தரத்தின் அடிப்படையில் உயர்த்தி, அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.41 வரை ஊக்கத்தொகை உட்பட வழங்கப்படும்.
புதுச்சேரி நியாய விலைக் கடைகள் மூலம் துவரம்பருப்பு, உளுந்து, சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடக்க விலையில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் முக்கிய 10 இடங்களில் சிறிய அடக்க விலைக் கடைகள் அமைக்கப்படும்.