திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்து இடது கால் கட்டை விரலில் காயமடைந்த தமிழ்க்கொடி.
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூதாட்டியின் கால் விரலை எலி கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ரத்தினம் மனைவி தமிழ்க்கொடி(68). இவர் கால் முறிவு பிரச்சினைக்காக சில நாட்களுக்கு முன்பு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பொது வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கு தமிழ்க்கொடிக்கு ஜூலை 20-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு உதவியாக அவரது மகன் விஜயகுமார் இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை 5 மணியளவில் எழுந்த விஜயகுமார், அவரது தாய் தமிழ்க்கொடியின் படுக்கையில் இருந்து எலி ஓடுவதை கண்டார்.
இதையடுத்து, அருகில் சென்று பார்த்தபோது, தமிழ்க்கொடியின் இடது கால் கட்டை விரலில் பாதியை எலி கடித்து தின்றுவிட்டதும், விரலில் இருந்து ரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
தமிழ்க்கொடி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் எலி கடித்ததை உணர முடியவில்லை. இதுகுறித்து மருத்துவமனை பணியாளர்களுக்கு விஜயகுமார் தகவல் அளித்தார். இதையடுத்து, மருத்துவமனை பணியாளர்கள் அவசர அவசரமாக தமிழ்க்கொடியை, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், “நாங்கள் இருந்த வார்டில் பகல் வேளையிலேயே எலித் தொல்லை அதிகமாக உள்ளது. இதுபற்றி 3 நாட்களாக மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், இப்போது எனது அம்மா கால் விரலை இழந்துள்ளார். மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்கள் மற்றும் அவர்களுடன் வருவோரின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான சூழலை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.
மருத்துவர்கள் விளக்கம்: இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததாவது: திருச்சி அரசு மருத்துவமனையில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஒருங்கிணைந்த தூய்மைப்பணி நடைபெறுகிறது. இதில், எலி உள்ளிட்டவை வார்டுக்குள் வராதபடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற அந்த வார்டில் உணவு வாசனையைக் கொண்டு, அதை சாப்பிடுவதற்காக வார்டின் கதவு வழியாக வெளியே இருந்து எலி வந்துள்ளது. அப்போது சிகிச்சையிலிருந்த மூதாட்டியின் காலை கடித்துள்ளது. இதுகுறித்து தகவல் வந்த உடனே மூதாட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூதாட்டி இப்போது நலமாக உள்ளார் என்றனர்.