புதுச்சேரி: நள்ளிரவில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக ரங்கசாமியை மீண்டும் தேர்வு செய்தனர். அமைச்சர்கள் யார், யார் என விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கிறது. இத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுகளில் வென்றுள்ளது. அதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற வேட்பாளர் அனைவரும் முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவனருமான ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று நள்ளிரவில் காமராஜர் சாலையில் உள்ள ஹோட்டலில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமியை என்ஆர்காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர்.
இதற்கான கடிதத்தில் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர். என்டிஏ கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் ரங்கசாமிதான் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், புதுச்சேரியில் யார் யாருக்கு அமைச்சர் பதவிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் என்பதை முதல்வர் ரங்கசாமி முடிவு எடுக்கவுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, விரைவில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை சந்திக்கவுள்ளதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார்.