புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி |கோப்புப் படம்

 
தமிழகம்

மீண்டும் ‘தேர்தல் புறக்கணிப்பு’ அஸ்திரம் ஏந்தும் ரங்கசாமி

மாநிலத்தின் மீதான அக்கறையா... அரசியல் ஸ்டண்டா?

செ.ஞானபிரகாஷ்

தேர்தலுக்குத் தேர்தல் ‘மின்னலாய்’ வந்து போகும் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து பிரச்சினை இப்போதும் ரகளைகட்ட ஆரம்பித்திருக்கிறது.

மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்று சொல்லியே 2011-ல் தனி கட்சி தொடங்கியவர் இப்போதைய முதல்வர் ரங்கசாமி. இவரது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பெயரில் உள்ள ‘என்.ஆர்’ என்பதை ‘என்.ரங்கசாமி’ என்று மக்கள் சொன்னாலும் அக்கட்சி ‘நமது ராஜ்ஜியம்’ என்ற பெயரிலேயே தேர்தல் ஆணையத்தில் பதிவாகியிருக்கிறது.

          

இதற்கு, “மாநில அந்தஸ்து இருந்தால் மட்டுமே புதுச்சேரியில் நாம் ஆட்சி செய்ய முடியும்; நமது மக்களின் ராஜ்ஜியம் நடக்கும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கட்சிக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்று அக்கட்சியினர் ’அழகான’ விளக்கம் தருவதுண்டு. ஆனால், கட்சி தொடங்கி 16 ஆண்டுகளை கடந்த பிறகும், தனது லட்சியத்தை அடைய முடியாமல் தத்தளிக்கிறது என்.ஆர்.காங்கிரஸ்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதே ரங்கசாமி தனது தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்தை தான் முதல் வாக்குறுதியாகத் தந்திருந்தார். ஆனால், சொன்னதோடு சரி. சொன்னதைச் செய்து முடிக்க மத்திய பாஜக அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வில்லை ரங்கசாமி. இந்த விஷயத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு என்ன மனநிலையில் இருந்ததோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத நிலையிலேயே இப்போதுள்ள பாஜக அரசும் இருக்கிறது.

சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு சமூக அமைப்புகளைக் திரட்டிக் கொண்டு டெல்லிக்கே சென்று போராட்டம் நடத்தியும் பிரயோஜனமில்லை. இந்த நிலையில், தற்போது நடப்பு சட்டப் பேரவையின் இறுதி நாளில், “புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி, வரும் சட்டப் பேரவைத் தேர்தலை புறக்கணிக்க தயார்” என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய புதுச்சேரி சமூக ஆர்வலர்கள், "எப்போதும் தேர்தல் வந்தால் தான் மாநில அந்தஸ்து பற்றி ரங்கசாமி பேசுவார் என்று எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரங்கசாமி, ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கத் தயார்; அதற்கு மற்ற கட்சிகள் தயாரா?’ என்று வீரவசனம் பேசினார்.

அத்தோடு அதை மறந்துவிட்டார். இத்தனைக்கும் கடந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டுத்தான் முதல்வரானார். கடந்த 5 ஆண்டுகளாக மாநில அந்தஸ்து பெறுவதற்கான தீவிரமான நடவடிக்கைகள் எதிலும் இறங்காமல் இருந்துவிட்டு இப்போது தேர்தல் வருகிறது என்றதும் பழையபடி ‘தேர்தல் புறக்கணிப்பு’ அஸ்திரத்தை எடுக்கிறார்” என்றனர்.

காங்கிரஸ் தரப்பில் பேசியவர்களோ "பாஜக கூட்டணியில் இருந்தாலும் மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக அனைத்துக்கட்சி கூட்டம் எதையும் நடத்த ரங்கசாமி முயற்சி எடுக்கவில்லை. அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இதுபற்றி முறையிடுவதற்கான முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை. ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் இல்லை’ என மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே அறிவித்ததற்குக் கூட ரங்கசாமி தனது வலுவான எதிர்ப்பைக் காட்டவில்லை. இந்த நிலையில், அவர் தேர்தலைப் புறக்கணிப்பேன் என்று சொல்வதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை” என்றனர்.

எதிர்க் கட்சித் தலைவரும் திமுக மாநில அமைப்பாளருமான சிவாவோ, "மக்களால் தேர்வுசெய்யப்பட்ட புதுச்சேரி அரசுக்கு அதிகாரமே இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக தரப்பில் தெரிவித்ததை முதல்வர் ஒரு சவாலாக ஏற்றுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ‘தேர்தலை புறக்கணித்து நாமெல்லாம் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம்’ என ரங்கசாமி அறிவித்தால் நாங்களும் அதில் பங்கேற்போம்” என்கிறார்.

‘தேர்தல் புறக்கணிப்பு’ அஸ்திரத்தை ரங்கசாமி மீண்டும் கையில் எடுத்திருப்பது உண்மையிலேயே மாநிலத்தின் மீதான அக்கறையா அல்லது தேர்தலுக்காக பாஜக-வுடன் பேசிவைத்துக் கொண்டு நடத்தும் அரசியல் ஸ்டண்டா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

SCROLL FOR NEXT