“தேர்தல் விதிமுறைகளை உடனே அமல்படுத்த வேண்டும்” - கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

Updated on
1 min read

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை உடனே அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியின் குறைபாடுகளும், முறைகேடுகளும், மக்களின் அதிருப்தியும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். அதனை மடைமாற்றம் செய்வதற்காக, கடைசி நேர, காலதாமத, காலாவதியாகிப் போன ஒரு நடவடிக்கையை தேர்தல் நேரத்தில் திமுக அரசு எடுத்துள்ளது. அதுதான் ரூ.5,000 உரிமை தொகை அறிவிப்பு.

மழை, புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணம் வழங்குவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கோடைகால நிவாரணம் என்று ஒரு புதிய கரடியை விட்டிருக்கிறார் ஸ்டாலின். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதை மூடிமறைக்க, வார்த்தை ஜாலங்கள் மூலம் அரசு பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்.

இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். இந்த அறிவிப்பு எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும். இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியை குறைக்கவும் முடியாது. மாற்றவும் முடியாது.

மகளிர் மனமும் மாறாது. தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, அரசு பணத்தைத் தவறான முறையில் தாரை வார்ப்பதை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதிக்கிறது? நீதிமன்றங்களும், மத்திய அரசும் இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வேதனைக்குரியது.

ஆட்சி - அதிகாரம், பண பலம், சாதி பலம், அடியாள் பலம் உள்ளிட்ட எந்த அம்சங்களும் மேலோங்கிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. ஜனநாயகப் பூர்வமாக தேர்தலை எதிர்கொள்ளாமல், ஏமாற்று அரசியலில் ஈடுபடும் இந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, தேர்தலையொட்டி இன்னும் திமுகவால் அரங்கேற்றப்பட இருக்கின்ற முறைகேடுகளை தடுத்து, நியாயமான தேர்தலை நடத்திட, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டுவர வேண்டும். அனைத்து அரசு நிர்வாகத்தையும் தேர்தல் ஆணையமே நேரடியாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கிருஷ்ணசாமி</p></div>
“திமுக ஆட்சி நிலைக்கக் கூடாது என்பது தான் மக்களின் கனவு” - விஜய் ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in