சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் விமானம் மூலம் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த ஆக.5-ம் தேதி விசைப்படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடலோரக் காவல் படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 11 பேரையும் கைதுசெய்தனர். அதேபோல் ஆக.12-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 9 ராமேசுவரம் மீனவர்களும், எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 20 மீனவர்களும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 20 மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, அபராதத் தொகையை செலுத்தினால் விடுதலை என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் 16 மீனவர்கள் அபராதத் தொகையை செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 4 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 16 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் 16 மீனவர்களையும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர்.
இதையடுத்து, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 16 மீனவர்களும் விமானத்தில் நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.