சென்னை: பரந்தூர் மக்களின் உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது வாழ்வுரிமை, நில உரிமை மற்றும் எதிர்கால தலைமுறைகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அப்பகுதி மக்கள் பல்வேறு ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த காலகட்டத்தில் நானும் அவர்களுக்காக குரல் கொடுத்தேன். விமான நிலைய திட்டத்தால் ஏற்கெனவே அச்சத்திலும் உறுதியற்ற நிலையிலும் வாழ்ந்து வரும் மக்களுக்கு தற்போது மீண்டும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக பரவிவரும் தகவல்கள் மேலும் மன உளைச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானவைதான். ஆனால் அவை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தும், விவசாயநிலங்களை பறித்தும், உள்ளூர் மக்களின் உரிமைகளைப் புறக்கணித்தும் மேற்கொள்ளப்படக்கூடாது.
அப்பகுதி மக்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பளித்து, அவர்கள் வாழ்ந்து வரும் நிலங்களிலேயே பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்வதற்கான உத்தரவாதத்தை அரசுகள் வழங்க வேண்டும்.
மக்களின் உரிமைகளை மீறி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் எந்தத் திட்டங்களும் திணிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், என் தலைமையில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாபெரும் ஜனநாயக ரீதியான போராட்டம் முன்னெடுக்கப்படும்.
பரந்தூர் மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும். விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.