தமிழகம்

“அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது..!” - ராமதாஸ் ஆவேச பேச்சு

க.ரமேஷ்

அன்புமணி தான் பாமக தலைவர் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் - அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, 2026-ம் ஆண்டுஆகஸ்ட் வரை கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்வார். பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும்அவருக்குத்தான் உள்ளது என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பாமக பொதுக் குழு கூட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் காந்தி ராமதாஸ், பாமக சட்டப்பேரவை கொறடா மற்றும் பாமக இணைப் பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: ‘எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்னைப் போல் இருப்பான்’ என்று எண்ணினேன். ஆனால், எனக்கு ஒரு மகன் பிறந்தார். அவர் என்னிடம் இருந்து என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை. நான் சிந்திய வியர்வை எல்லாவற்றையும் பறித்து விட்டார். இருந்தாலும் என்னிடமிருந்து என் உரிமையை மட்டும் பறிக்க முடியாது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற திங்கள்கிழமை விசாரணைக்கு வரும். உண்மை தான் வெற்றிபெறும். எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ராமதாஸை வீழ்த்த முடியாது. உச்ச நீதிமன்றம் சென்றாலும் என் உரிமையை பறிக்க முடியாது. நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது.

46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிராமங்கள் என் மக்களிடம் சென்று நான் வளர்த்த கட்சியை முழுவதும் அபகரிக்க முயற்சிக்கிறார். அப்படி உழைத்து தான் இந்தக் கட்சியின் தலைவராக ஆகியிருக்கிறேன்; எனக்கு உதவியாக செயல் தலைவராக எனது மகள் ஸ்ரீகாந்தியை நியமித்துள்ளேன்.

கடந்த 28.05.2022 அன்று திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்டது. ‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள்; என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கி விட்டார். இருந்தாலும் ஜெயிக்கப் போவது இந்த ராமதாஸ் தான்.

நான் மக்களிடம் சென்று ஓட்டு கேட்டபோது, ‘ஓட்டு ஒன்று போடுங்க; கட்சியின் வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் நோட்டு ஒன்று கொடுங்க’ என்று கேட்டு வளர்த்த கட்சி இது. என்னுடைய உரிமையையும் உழைப்பையும் யாராலும் திருட முடியாது. இது போன்று தானாக விரும்பி வரும் ஒரு கூட்டத்தை உங்களால் கூட்ட முடியுமா?

ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.25 லட்சத்தை முன்கூட்டியே கொடுத்துதான் உங்களால் கூட்டத்தைக் கூட்ட முடிகிறது. நான் செய்த பெரிய தவறு என்னவென்றால் அன்புமணியை படிக்க வைத்து டாக்டர், மத்திய மந்திரி, கட்சியின் தலைவராக நியமித்ததுதான்.

நான் மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வந்து நலம் விசாரித்தனர். அன்புமணி மட்டும், கீழே உள்ள மருத்துவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டார். மக்களை ஏமாற்ற முடியாது. நீதி, நியாயம் வெற்றி பெறும். என் பக்கம் நியாயம் உள்ளது. மக்கள் என்னுடன் உள்ளனர்.

நான் வயிறு எரிந்து சொல்கிறேன்; அன்புமணியின் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல்தான், பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் வளர்ச்சி அடையப் போகிறது.

2026-ம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஏராளமான சட்டப்பேரவை உறுப்பினர்களை உருவாக்கி, அவர்களில் சிலரை அமைச்சராக உருவாக்குவேன். இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார் ராமதாஸ்.

இக்கூட்டத்தில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் புதா அருள்மொழி, “முன்பே ராமதாஸால் அறிவிக்கப்பட்டது போல, வரும் டிச. 12-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் இடஒதுக்கீடு போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT