சென்னை: பாமக விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்றைக்கு தள்ளி வைத்துள்ளது.
பாமக பெயர், கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதி்க்கக் கோரியும், பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்கக் கோரியும் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த தடையை நீக்கக்கோரி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக நேற்று நடந்தது.
அப்போது, இந்த வழக்கில் ஏற்கனவே தங்களது தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, “தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான பிரச்சினை நாளைக்கே சரியாகி விடும். கட்சியை வைத்துத்தான் இந்த வழக்கில் முடிவு எடுக்க முடியும்.
கட்சியின் பொதுச் செயலாளரான வடிவேல் ராவணனை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்ப்பதால் என்ன பிரச்சினை?” என கேள்வி எழுப்பினார். அப்போது வழக்கின் ஆவணங்கள் கோரி அன்புமணி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, அனைத்து தரப்பு மனுக்களும் நாளைக்கு (இன்று) விசாரிக்கப்படும் என கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.