

நாகர்கோவில்: தக்கலை அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய ஆம்னி பேருந்து, ஆற்றில் பாய்ந்தது. மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து, நேற்று அதிகாலை நாகர்கோவில் வந்தது அங்கு பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், திருவனந்தபுரத்துக்கு 28 பயணிகளுடன் புறப்பட்டது.
தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடி, எதிரே வந்த பைக் மீது மோதியது. அதன் பிறகும் நிற்காமல் அப்பகுதியில் உள்ள ஆற்றுக்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில் பைக்கில் வந்த சிதறால் பகுதியைச் சேர்ந்த விஜய் (28), புதுக்கடை அருகே பைங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆற்றுக்குள் விழுந்த பேருந்தில் இருந்த பயணிகள் வெளியே வரமுடியாமல் அபயக்குரல் எழுப்பினர். அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தக்கலை தீயணைப்பு நிலையத்தினரும் விரைந்து வந்து, பேருந்தின் பின்பக்க அவசரக் கதவை உடைத்து பயணிகளை மீட்டனர். ஓட்டுநர் உட்பட 28 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அவர்கள் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த விஜய்யின் மனைவி கர்ப்பமாக உள்ளார். சுரேஷுக்கு மனைவி மற்றும் 5 வயதில் மகன் உள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, எஸ்.பி. ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். இதுதொடர்பாக, தக்கலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.