புதுடெல்லி: பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
பாமக நிறுவனரான ராமதாஸூக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கட்சியினர் இருபிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் பாமகவுக்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், ராமதாஸ் தனது மகள் காந்திமதியை செயல் தலைவராக நியமித்தார்.
இந்நிலையில் பாமகவின் தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம் வரும் 2026 ஆகஸ்டு வரை பாமக வின் தலைவராக அன்புமணியே தொடருவார் என்றும், மாம்பழ சின்னத்துடன், பாமக சார்பில் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்குத்தான் உள்ளது எனவும் அறிவித்தது.
இதில் கோபமடைந்த ராமதாஸ், பாமகவின் தலைவராக பதவி வகித்த அன்புமணியின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவடைந்து விட்டது என்றும், தாங்கள் தான் உண்மையான பாமக என்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார்.
ஆனால் ராமதாஸ் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அதையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா, விசாரணையை நாளை மறுதினத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.