பாமகவும், மாம்பழம் சின்னமும் அன்புமணி கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அய்யா பாமக என்ற புதிய கட்சி ராமதாஸ் தரப்பால் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்சினையால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் பெரும்பாலானோர் அன்புமணி ஆதரவாக இருப்பதால், கட்சியில் அன்புமணி கை ஓங்கி உள்ளது. இதனை பயன்படுத்தி முன்கூட்டியே அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்தார். கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணி கட்டுப்பாட்டி இருப்பதால், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ராமதாஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், ராமதாஸ் அணியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் “அய்யா பாட்டாளி மக்கள் கட்சி” என்ற புதிய கட்சி உருவாகியுள்ளது. பாமகவின் பெயர், வண்ணம், கொடி ஆகியவற்றை பிரதிபலிக்க கூடிய வகையில், ஏற்கெனவே இருக்கும் பாமக கொடியில் ராமதாஸின் முகத்தை மட்டும் பதித்து புதிதாக கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, வேட்பாளர்களை நிறுத்துவதற்காக அய்யா பாமக என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ராமதாஸ் தரப்பில் கேட்ட போது, “அய்யா பாமக என்ற புதிய கட்சி பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.
அன்புமணி தரப்பில் கேட்டபோது, கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணியிடம் உள்ளது. அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால், தேர்தலில் எங்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். திமுகவின் சதி ஆலோசனையின்படியே புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்சிக்கு கொடுத்த முகவரிக்கு சரியான ஆவணம் சமர்ப்பிக்காததால், தேர்தல் ஆணையம் கட்சியை பதிவு செய்ய மறுத்துள்ளது” என்றனர்.