ராம.ரவிக்குமார்
மயிலாடுதுறை: திமுக ஆட்சி திராவிட மாடல் அரசு என்றால், தவெக ஆட்சி திருச்சபை மாடல் அரசாக உள்ளது என இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக ஆட்சி திராவிட மாடல் அரசு என்று சொன்னார்கள். தற்போது அமைந்துள்ள விஜய் தலைமையிலான தவெக ஆட்சி திருச்சபை மாடல் அரசாக செயல்படுகிறது. திராவிட மாடலும், திருச்சபை மாடலும் வெவ்வேறு முகமூடிகளாக இருக்கின்றன.
தமிழகத்தில் அரசமைப்பில் பதவியேற்கும் ஒருவர் பைபிள் வசனம் சொல்வதும், உயர் பதவிகளில் இருப்பவர்கள் குறிப்பிட்டஒரு மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதும் திருச்சபை மாடலுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது கோயில்களில் எவ்வளவு பணம் கையிருப்பு இருந்தது? தற்போது எவ்வளவு உள்ளது? என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் தமிழக முதல்வர் பேசி, மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உரிய சட்ட உத்தரவை இந்த அரசு பின்பற்றும் என நம்புகிறோம். இல்லையென்றால் அதன் பலனை அனுபவிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.