தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே நடந்த சப்த கன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர் ரமேஷ், எம்எல்ஏ ஆர்.விஜய் சரவணன் உள்ளிட்டோர்.
தஞ்சாவூர்: காவிரி ஆற்றில் 1961-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் நேமம் பகுதியில் புதைந்த 1,008 சிவலிங்கங்களை மீட்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தில், அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பில், சப்த கன்னியர் மாகாளத்து காளா பிடாரி கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் 1351-வது சதயவிழா, முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும்விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
இதில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சப்த கன்னியர் மாகாளத்து காளாபிடாரி கோயில் பூமி பூஜையை தொடங்கி, கல்வெட்டை திறந்துவைத்து பேசியது: இந்த மண்ணை தெய்வீக ஆற்றலால் நிரப்ப 1,008 சிவலிங்கங்களை பெரும்பிடுகு முத்தரையர் நிறுவியுள்ளார். 1961-ல் காவிரியில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, சிவலிங்கங்கள் நீரில் மூழ்கி பூமிக்குள் அடைக்கலமாகின.
இந்த வரலாற்று பொக்கிஷங்களை மீட்டெடுக்கும் பணியைதொடர வேண்டும். நமது முன்னோரின் பக்தியை எதிர்கால சந்ததியினர் கண்டுகளிக்கும் வகையில் ஒரு நினைவிடத்தைக் கட்டுவோம். ஜென் ஸி தலைமுறையினர் நேர்மையும், கருணையும் கொண்டு சமூகத்துக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்யும் நெறிமுறைமிக்க தலைவர்களாக முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அமைச்சர் ரமேஷ்பேசும்போது, போருக்குப்போகும்போதே வாகைப்பூவைச் சூட்டிக் கொள்வார் பெரும்பிடுகு முத்தரையர். அதேபோல முதல்வர் விஜய் தவெகவைத் தொடங்கும்போதே, கொடியில் வாகைப்பூவைச் சூடி, ஆட்சி அமைத்தார் என்றார். இதில் அறங்காவலர் மீ.சந்திரசேகரன், எம்எல்ஏ ஆர்.விஜய் சரவணன், முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணித் தலைவர் ஆர்.வி.பரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.