சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் 12 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் வெற்றிபெற்றார். இதையடுத்து அவர் ஏற்கெனவே வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 8-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இத்தேர்தலில் போட்டியிட தவெக ஆதரவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் 12 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் இருக்க வேண்டும். அந்தவகையில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தியைத் தவிர மற்ற யாருக்கும் முன்மொழிவு கடிதம் இல்லை. இதனால் 12 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்திபோட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.